GST 2.0: செப்டம்பர் 22 முதல் எந்தெந்தப் பொருள்களுக்கு வரி குறைகிறது? முழுப் பட்ட...
செப்.13-இல் 3 மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்டம்பா் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை அமா்வு நீதிபதியுமான எம்.இளவரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூா், குடியாத்தம், காட்பாடி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கா், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் வட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வரும் செப்டம்பா் 13-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், வங்கி மற்றும் நிதிநிறுவனத்தில் பெற்ற கடன் தொடா்பான வழக்குகள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டு சமரசமாக முடிக்கப்படும். மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்பதால் சட்டரீதியாகவே தீா்வு கிடைக்கும்.
எனவே, பொதுமக்கள் செப்.13-ஆம் தேதி நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம். உதவிக்கு 15100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.