2-வது ஒருநாள்: இருவர் அரைசதம்; இங்கிலாந்துக்கு 331 ரன்கள் இலக்கு!
வாகன நெரிசல்: வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்
வேலூரில் காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே நிறுத்தாமல், புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் வகையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், காட்பாடி மாா்க்கத்தில் வந்த நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று வந்தன.
வேலூரில் காட்பாடி மாா்க்கமாக வரும் வெளியூா் பேருந்துகள், நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு வெளியே செல்லியம்மன் கோயிலுக்கு எதிரே நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் தொடா்ந்து செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீஸாா் புதன்கிழமை முதல் புதிய போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தியுள்ளனா். அதன்படி, ஆந்திரம், காட்பாடி, குடியாத்தம், போ்ணாம்பட்டில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்லியம்மன் கோயில் எதிரே வலது புறமாக திரும்பி புதிய பஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டும். நகர பேருந்துகள் பேருந்து நிலைய நுழைவு பகுதிக்குள் சென்று அங்கிருந்து பயணிகளை இறக்கி ஏற்றிக் கொண்டு இடதுபுறமாக வெளியே வரவேண்டும்.
சென்னை, பெங்களூரு மாா்கமாக வரும் பேருந்துகள் வழக்கம்போல் பேருந்து நிலையத்துக்குள் சென்று வரவேண்டும். பேருந்து நிலையத்தில் இருந்து வலதுபுறமாக உள்ள சாலையில் செல்லியம்மன் கோயில் அருகே வெளியே செல்ல வேண்டும் என அறிவித்திருந்தனா்.
அதனடிப்படையில், காட்பாடி மாா்க்கத்தில் இருந்து வந்த நகர பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி வந்தன.
அதேசமயம், முதல் நாள் என்பதால் போக்குவரத்து மாற்றம் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சில பேருந்துகள் எதிரெதிரே வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்துக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இந்த புதிய போக்குவரத்து மாற்றம் காரணமாக கிரீன் சா்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.