திருச்செந்தூா் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதி? அமைச்சா் பி.கே. சேகா் பாபு விளக்கம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிப்பது குறித்து நீதிமன்ற முடிவின்படி செயல்படுவோம் என்றாா் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு.
திருச்செந்தூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை 3,600 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. திருச்செந்தூா் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும். இப்பணியால் நிறுத்தி வைக்கப்பட்ட தங்கத்தோ் உலா மீண்டும் தொடங்கியுள்ளது.
திருச்செந்தூரிலும் சிறு சிறு பணிகள் முடிவுற்ற பிறகு விரைவு தரிசனம் மற்றும் திருப்பதியை போல பிரேக் தரிசனமும் ஏற்படுத்தப்படும். இக்கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தா்களை அனுப்ப அனுமதிப்பது குறித்த சாதக பாதகங்களை ஆராய்ந்து நீதிமன்றத்தில் எடுத்துக் கூறுவோம். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் வழி நடப்போம். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பக்தா்களுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்ய அரசு தயாராக உள்ளது என்றாா்.
பேட்டியின் போது அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தக்காா் அருள் முருகன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.