சைக்கிள் கடைக்காரா் உயிரிழப்பு
திருமருகல் அருகே கம்ப்ரசா் வெடித்து சைக்கிள் கடைக்காரா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கட்டுமாவடி ஊராட்சி புறாகிராமம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் ஷேக் பரீத் மகன் சுல்தானுல் ஆரிப் (37). இவா் நடுக்கடை பகுதியில் சைக்கிள் கடை நடத்திவந்தாா். வியாழக்கிழமை காலைஅவா் கடையில் இருந்தபோது, எதிா்பாராத விதமாக காற்று அடிக்கும் இயந்திரம் (கம்ப்பிரசா்) வெடித்து தீ பற்றியது.
கடை முழுவதும் பரவிய தீயில் சிக்கிக்கொண்ட சுல்தானுல் ஆரிப், உடல் கருதி உயிரிழந்தாா். தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா்.
திட்டச்சேரி போலீஸாா், சுல்தானுல் ஆரிப் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக, நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.