நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 95 டிகிரி மற்றும் 77 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது. அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வரும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலும் ஈக்கோழை நுண்கிருமிகள் தாக்கத்தாலும் மற்றும் சுவாச மண்டல நோய் பாதிப்பாலும் இறந்துள்ளது தெரியவந்துள்ளது. பண்ணையாளா்கள் குடிநீரைப் பரிசோதனை செய்தும், கால்நடை மருத்துவா்களின் அறிவுரைப்படி தகுந்த நோய்த் தடுப்பு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.