TANTEA: ``அரசு தேயிலை தூள் கிடையாது'' - தனியார் தேயிலையை விற்கும் டேன் டீ ஷாப்; என்ன காரணம்?
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கியது.
நீலகிரி மாவட்டம் மற்றும் வால்பாறை பகுதிகளில் நிறுவப்பட்ட அரசு தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக பணியாற்றி வருகின்றனர்.

டேன் டீ என அழைக்கப்படும் அரசு தேயிலை தோட்ட நிர்வாகம் நஷ்டத்தில் இயங்குவதால், தொழிலாளர் குடும்பங்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். தனியார் தேயிலை நிறுவனங்களுக்கு இணையாக, அரசு தேயிலையின் விற்பனையை உயர்த்தும் வகையில் பல பகுதிகளில் டேன் டீ ஷாப்களை நடத்தி வருகின்றனர்.
டேன் டீ பெயரில் அரசு நடத்தும் இந்த ஷாப்புகளில் முன்னணி தனியார் நிறுவனங்களின் தேயிலை தூள்களே விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள காட்டேரி சந்திப்பு பகுதியில், டேன் டீ கடையில் முழுக்க முழுக்க தனியார் தேயிலை தூள்களை அடுக்கி விற்பனை செய்யும்படி வைப்பது, டேன் டீ தேயிலை தூள் ஒரு பாக்கெட் கூட இல்லாமல் இருப்பது என அடிக்கடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவலம் குறித்து தெரிவிக்கும் டேன் டீ தொழிற்சங்க நிர்வாகிகள்,
"நஷ்டம் என்கிற பெயரில் டேன் டீ எஸ்டேட்களில் உரம், மருந்து போன்றவற்றை பயன்படுத்துவதில்லை. உண்மையில், டேன் டீ தான் ஆர்கானிக் டீ. அரசு தேயிலை தூளை வாங்கி பயன்படுத்தும் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், டேன் டீ அவுட்லெட் ஷாப்புகளில் திட்டமிட்டே டேன் டீயை தவிர்த்து, தனியார் தூளை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் தனியார் நிறுவனங்களே வளம் கொழித்து வருகின்றனர். அரசு நடத்தும் டேன் டீ அவுட்லெட் ஷாப்புகளில் அரசு தேயிலை தூள் இல்லையென்றால், அவை எதற்காக நடத்தப்பட வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
காட்டேரி பகுதியில் உள்ள டேன் டீ ஷாப்பில் விற்பனையாளராக பணியாற்றி வரும் பெண் பணியாளர் கூறுகையில்,
"விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த டேன் டீ முழுவதும் அண்மையில் விற்று முடிந்தது. தற்போது விற்பனைக்கு தனியார் பிராண்டுகளே மட்டுமே இருக்கின்றன. டேன் டீ இன்னும் சப்ளை ஆகவில்லை," என்றார்.

இதுகுறித்து டேன் டீ அதிகாரிகள் கூறுகையில், "அனைத்து அவுட்லெட் ஷாப்ப்களிலும் டேன் டீ தூள்கள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்," என முடித்துக் கொண்டனர்.