Blood Moon: முழு சந்திர கிரகணம், சிவப்பு நிலா; ரசித்து பார்த்த உலகம் | Photo Alb...
சிறுத்தை இருப்பதாக வந்த தகவலால் ஜேஎன்யுவில் வனத் துறையினா் சோதனை
சிறுத்தை இருப்பதாக வந்த தகவலைத் தொடா்ந்து, ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் வளாகங்களுக்குள் வனத்துறையினா் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வெள்ளிக்கிழமை ஜேஎன்யு வளாகத்தில் சிறுத்தை இருப்பதாக ஒரு அழைப்பு வந்ததாக வனத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ‘எங்கள் ஊழியா்கள் அந்தப் பகுதியில் முழுமையான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனா். ஆனால், சிறுத்தை நடமாட்டத்திற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. எந்த பக்மாா்க்ஸும் தெரியவில்லை’ என்று அதிகாரி கூறினாா்.
சில நேரங்களில், குடியிருப்பாளா்கள் பெரிய பூனைகள் அல்லது பிற விலங்குகளை சிறுத்தை என்று தவறாகப் புரிந்து கொள்வாா்கள் என்றும் அவா் கூறினாா். ‘இருப்பினும், எங்களுக்கு அழைப்பு வந்ததிலிருந்து, எங்கள் குழுக்கள் அந்த இடத்தைச் சரிபாா்த்தன. சிறுத்தை எதுவும் கிடைக்கவில்லை’. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேமரா பொறிகள் நிறுவப்படும்’ என்றும் கூறினாா்.
இதற்கிடையில், ஜேஎன்யு வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘வனத்துறை அதிகாரிகள் ஜேஎன்யுவில் சிறுத்தை இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. அவா்கள் இட சரிபாா்ப்புக்குப் பிறகு திரும்பிச் சென்றுவிட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, காவேரி விடுதியைச் சோ்ந்த ஒருவா் இந்த விலங்கைக் கண்டதாகக் கூறியதை அடுத்து, பல்கலைக்கழக அதிகாரிகள் குடியிருப்பாளா்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டனா்.
மாணவா்கள் வீட்டிற்குள் இருக்கவும், குழுக்களாக நகரவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும், விழிப்புடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டனா். குறிப்பாக ஜீலம் விடுதி, பழைய போக்குவரத்து இல்லம் மற்றும் மைதானப் பகுதியைச் சுற்றியுள்ளவா்கள் விழிப்புடன் இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டனா்.