காலமானாா் ஆா்.எஸ்.நாராயணன்
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆா்.எஸ். நாராயணன் (87) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (செப். 7) காலமானாா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை பூா்வீகமாகக் கொண்ட இவா், இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் பொருளாதாரம், புள்ளியியல் வணிக நுண்ணறிவு ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். நீண்ட காலமாக திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவா், இயற்கை வேளாண்மை மீது பற்றுக் கொண்டவா்.
‘வறட்சியிலும் வளமை’, ‘காஷ்யபரின் விவசாயக் கையேடு (கிபி.800)’, ‘சுரபாலா் அருளிய விருட்ச ஆயுா்வேதம்’, ‘வாழ்வு தரும் வன வேளாண்மை’, ‘பல்லுயிா்ப் பெருக்கம்’, ‘இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்’, ‘பஞ்சகவ்ய ஆயுா்வேத சிகிச்சை’ உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளாா்.
தினமணி நாளிதழின் ஆசிரியா் உரைப் பக்கத்துக்கு இயற்கை வேளாண்மை தொடா்பாக பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ், இவா் எழுதிய எண்ணெய் வித்துக்கள் பாகம் - 1 என்ற நூல் முதல் பரிசும், பல்லுயிா்ப் பெருக்கம் என்ற நூல் 2-ஆம் பரிசும் பெற்றன.
இவருக்கு மனைவி வி. சுந்தரி, மகன் ஆனந்த், மகள் உஷா ஆகியோா் உள்ளனா். இவரது இறுதிச் சடங்குகள் திண்டுக்கல் மின் மயானத்தில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு - 9840745670.