பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சிறைச்சாலை நூலகத்தில் பணி! நாளுக்கு ரூ. 525 ஊதியம்!
Trump: ``ட்ரம்ப் தன் தவறை உணரத் தொடங்கியுள்ளார்'' - கே.பி. ஃபேபியனின் அனுபவப் பகிர்வு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீது விதித்த பெரும் வர்த்தக வரிகள் தொடர்பான கடுமையான நிலைப்பாட்டை கடந்த சில நாட்களாக மென்மையாக்கி வருவதாக முன்னாள் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதலாக 25 சதவீதம் வரை வர்த்தக வரி விதித்தார்.
இதனால் மொத்த வர்த்தக வரி 50 சதவீதமாக உயர்ந்தது. அவரின் இந்த தீவிரமான வர்த்தக வரி உத்திகள் எதிர்பார்த்த முடிவுகளை அளிக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் இந்திய தூதர் கே.பி. ஃபேபியன் அவர்களின் கருத்துகள் வந்துள்ளன.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ``அமெரிக்கா–இந்தியா உறவுகளை மிகச் சிறப்பான உறவாக அதிபர் ட்ரம்ப் வர்ணித்துள்ளார். பிரதமர் மோடியுடனான தனது தனிப்பட்ட நட்பையும் வலுப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
பிரதமர் மோடியும், இந்த உணர்வு பரஸ்பரம் வலிமையானது என பதிலளித்துள்ளார். ஆனால், இதிலிருந்து 'ட்ரிபிள் டி' என்று அழைக்கப்படும் - 'அடிப்படையற்ற ட்ரம்ப் வர்த்தக வரிகள்' - விரைவில் முடிவடையும் என்று உறுதியான முடிவுக்கு வர முடியாது.
அதே நேரத்தில், இந்தியா சரணடையும் என்ற அவரது அனுமானம் தவறானது என்பதை ட்ரம்ப் உணரத் தொடங்கியுள்ளார். இந்தியா ஒரு நாகரிக நாடு; அனைவருடனும் நட்பு பாராட்டவும், வணிகம் செய்யவும் விரும்புகிறது.

ஆனால் இந்தியா யாரிடமிருந்தும் கட்டளையை ஏற்க முடியாது. இப்போதுவரை வர்த்தக வரிகள் 50 சதவீதம் என்ற நிலைமையிலேயே தொடர்கின்றன.
அமெரிக்க நிறுவனங்கள் வேளாண்மை மற்றும் பிற முக்கிய துறைகளில் நுழைவது தொடர்பாக, இந்தியாவின் சிவப்பு கோடுகள் உள்ளதால் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன," என்றார்.