பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் கடைசி வரிசையில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
துணை ஜனாதிபதி தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையும், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பா.ஜ.க. எம்.பி.க்களின் இரண்டு நாள் கூட்டம் இன்று காலை டெல்லியில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் தொடங்கியது.
2027-ம் ஆண்டை வளர்ச்சி நோக்காகக் கொண்டு, சமூக வலைத்தளங்களை எம்.பி.க்கள் சிறப்பாக பயன்படுத்துவது போன்ற அம்சங்களை மையமாகக் கொண்டு இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதோடு, எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

முதல் நாளில், மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், வேளாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி, ரயில்வே, போக்குவரத்து போன்ற துறை கமிட்டிகளுடன் எம்.பி.க்கள் கலந்துரையாடினர். பிரதமருக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது.
இரண்டாம் நாளில், வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி எம்.பி.க்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், இன்று காலை கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, கூட்ட அரங்கின் கடைசி வரிசையில் இருந்த இருக்கையில் அமர்ந்தார்.
பிரதமர் பின்வரிசையில் அமர்ந்ததை கண்ட எம்.பி.க்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் தங்கள் இருக்கைகளில் வந்து அமர்ந்தனர்.