Madharaasi: ``சிவகார்த்திகேயனை டயர்ட் ஆக்கணும்னு நினைச்சேன், ஏன்னா'' - ஸ்டன்ட் இ...
ஆரோக்கியம் தருவது சைவமா; அசைவமா? - மருத்துவர் சொல்வதென்ன?
சாப்பாடு என்றாலே நம் எல்லோருடைய மனதிற்குள்ளும் அப்படியொரு சந்தோஷம் வரும். அது பசிக்கும்போது வீட்டில் அம்மா தன் கையால் பரிமாறும் சாம்பார் சாதமாக இருந்தாலும் சரி, நண்பர்களுடன் சுடச்சுட பிரியாணி சாப்பிடும் தருணமாக இருந்தாலும் சரி.
வயிற்றுக்கு மட்டுமில்லை, மனதுக்கும் ஒரு திருப்தி கிடைக்கும். ஆனால், இந்த சாப்பாட்டிலேயே எப்போதும் ஒரு விவாதம் சைவம் நல்லதா; அசைவம் நல்லதா? இதைப் பற்றி அரசு சித்த மருத்துவர் ஆ.சங்கீதா அவர்களிடம் கேட்டபோது,

*காய்கறிகளின் வண்ண விருந்து
காய்கறிகள் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடென்ட்டுகள் அதிக அளவில் கொண்டுள்ளன. இவை நம் உடலின் வளர்ச்சிக்கும் , பாதுகாப்பிற்கும் உதவுகின்றன.
* பருப்பின் புரதச்சத்து
பருப்பு வகைகள் செடியின் ‘பவர் ஹவுஸ்.’ இவை சைவர்களுக்கு தேவையான புரத சத்தினை வழங்கி உடலின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பொதுவாகவே சைவ உணவுகள் அதிகப்படியான கொழுப்பு சத்தினை உடலில் சேர்க்காது. இதனால், இதய நோய்கள், பக்கவாதம் போன்ற வியாதிகள் வருவதற்கான அபாயம் குறைகின்றது.
* நார்ச்சத்து
இயற்கையாகவே காய்கறிகள், பழங்களில் அதிகப்படியான நார்ச்சத்து மிகுந்துள்ளதால் செரிமானத்தை சீர் செய்யவும், மலச்சிக்கல் வராமல் தடுக்கவும், உடல் பருமன், இதய நோய்கள் ஏற்படாத வண்ணமும் பாதுகாக்கிறது.
மேலும், சைவ உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் நைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடாக மாற்றம் அடைந்து ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

*உயர்தரப் புரதம்
அசைவ உணவுகள் முழுமையான புரதச்சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளன. அதாவது, மனிதனுக்கு தேவையான எல்லா வகையான கொழுப்பு அமிலங்களையும் கொண்டுள்ளன.
*ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
குறிப்பாக, மீன் சாப்பிடுபவர்களுக்கு இதயம், மூளை போன்ற பிரதான உறுப்புக்களை காக்கும் கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றன. மேலும், பாஸ்போலிப்பீடு என்னும் கொழுப்பு அமிலங்கள் அசைவ உணவுகளில் இருப்பதால் மூளை நன்றாக இயங்குவதற்கு உதவுகிறது.
மண்ணீரல் , கல்லீரல் போன்ற அசைவ உணவுகளில் இருக்கும் ஹீம் (Heme iron) உடலால் எளிதில் உறிஞ்சப்படுவதால் ரத்தசோகை ஏற்படும் அபாயம் குறைகின்றது.
*வைட்டமின் பி12
வைட்டமின் பி12 சைவ உணவுகளில் சிறிய அளவிலேயே கிடைக்கின்றது. எனவே, அசைவ உணவுகளை உண்போருக்கு இது நரம்பு நலத்தை காக்கவும், ரத்தத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆகவே குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், காசநோய், சத்துக் குறைபாடு போன்றவற்றால் உடல் நலிந்தோரின் வளர்ச்சிக்கு அசைவ உணவுகள் அதிலும் குறிப்பாக, ’சூப்’பாக எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும்.
* சைவ உணவுகளை மட்டும் உண்போர் புரதச்சத்து, வைட்டமின் பி12 , இரும்புச்சத்து முதலிய சத்துக் குறைபாடுகளுக்கு ஆளாகலாம்.
*அசைவ உணவுகளை உண்போருக்கு செரிமான கோளாறுகள், குடல் அலர்ஜி நோய் , மூட்டுவாதம் , மண்ணீரல் வீக்கம், கல்லீரல் வீக்கம், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை ஏற்படலாம்.
அசைவ உணவுகளில் இருக்கும் நைட்ரஜன் வேதி மாற்றமடைந்து மெள்ள மெள்ள உடலில் புற்றுநோய் ஏற்படுத்தும் வாய்புள்ளது.
மேலும், மாமிச உணவுகளை சரியான முறையில் சமைக்காவிட்டால் பிராணிகளின் மூலம் பரவும் தொற்றுகள், குடல் அழற்சி நோய் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

எல்லா மருத்துவ முறைகளும் ’சமநிலை தான் ஆரோக்கியத்திற்கு காரணம்’ என்னும் முக்கிய கருத்தை சொல்கிறது.
அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் குறிப்பாக சமைக்கும் விதம் முக்கியம்.
அதாவது சமையலில் ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் போன்ற செரிமானத்தை எளிதில் தூண்டும் பொருள்களை சேர்த்து சமைக்க வேண்டும்.
வறுத்தது, தீயில் சுட்டது, எண்ணெயில் பொரித்தது போன்ற உடலுக்குச் சிறந்தது அல்ல .
சைவ உணவுகளை உண்பவர்கள் புரதச்சத்தினை பருப்பு வகைகள், பால், நெய், தயிர், தாவர எண்ணெய் , கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற உணவு பொருட்களில் இருந்து எடுத்து சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்கு வைட்டமின் பி12 சப்ளிமென்ட் கூட தேவைப்படலாம்.
காய்கறி, கீரை, பழங்கள், பால் பொருள்கள் போன்றவற்றை சைவ மற்றும் அசைவ உணவுகளை உண்பவர்கள் இருவருமே தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டியவை.

உலக சுகாதார நிறுவனமும், இந்திய உணவியல் சங்கமும் (Indian Dietetic Association - IDA), ‘சைவம் அல்லது அசைவம் என்பது அவரவர்களுடைய விருப்பம். ஆனால், சமச்சீரான உணவு தான் முக்கியம். நம்முடைய உணவில் 50% காய்கறிகள், 25% புரதம், 25% மாவுச்சத்து இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்’ என்கிறது.
சைவம் சாப்பிடுபவர்கள் அசைவத்தை குறைத்து பேச வேண்டாம் : அசைவம் சாப்பிடுபவர் சைவத்தை கிண்டல் செய்ய வேண்டாம் ; இரண்டிலும் பலமும், குறையும் இருக்கின்றன.
சரியான அளவு, சரியான முறையில், சரியான நேரத்தில் சாப்பிடுவதுதான் நமக்கு நீண்ட ஆயுளை தரும்’’ என்கிறார் சித்த மருத்துவர் ஆ.சங்கீதா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...