குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: நாளை மாதிரி வாக்குப்பதிவு - என்ன நடக்கும்?
``ஆமை புகுந்த வீடும், பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது'' - ப.சிதம்பரம் காட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டட திறப்பு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு:
"தமிழ்நாட்டில் இதுவரை வாக்குத்திருட்டு நடக்கவில்லை. ஆனால் பீகாரில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது. கர்நாடகத்தில் சில தொகுதிகளில், மகாராஷ்டிராவில் பல தொகுதிகளில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் வாக்குத்திருட்டு நடத்த முடியாது என்று நான் டெல்லியில் உத்தரவாதம் வழங்கியுள்ளேன். காரணம், கேரளத்தில் இடதுசாரி அணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி வலிமையான கூட்டணிகள் உள்ளன.
அதேபோல், தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு நடக்காது. ஏனென்றால், ஒரு கிராமத்தில் வெளிநபர் நுழைந்தாலும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலும், உள்ளூர்வாசிகள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் பீகாரில் அப்படி இல்லை. அதனால் அங்கு வாக்குத்திருட்டு நடக்கிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி வலிமையாக உள்ளது. அதேபோல், எதிர்க்கட்சியையும் குறைத்து மதிப்பிட முடியாது. அ.தி.மு.க கூட்டணியும் வலிமையாக உள்ளது. வாக்குத்திருட்டு விவகாரத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டு முயற்சி நடக்கலாம், ஏனெனில் பா.ஜ.க நுழைந்துள்ளது. பா.ஜ.க-வோடு கூட்டணியில் உள்ள அ.தி.மு.க வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் பா.ஜ.க-விற்கு மட்டுமே வாக்குத் திருட்டு வழி திறந்திருக்கும்.
"ஆமை புகுந்த வீடும், அமீனா நுழைந்த வீடும் உருப்படாது" என்ற பழமொழி போல, பா.ஜ.க நுழைந்த மாநிலமும் உருப்படாது. இதனால், இன்னும் ஏழு–எட்டு மாதத்தில் தேர்தல் வரவுள்ளது. வாக்காளர் பட்டியல் வரும் போது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்."

"நமக்கு அ.தி.மு.க அணியும் போட்டி அணிதான். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. நாமும் அ.தி.மு.க அணியினரும் ஒரே கருத்தில் உடன்பட்டு இருக்கின்றோம். பா.ஜ.க-வை அவர்களிடமிருந்து கழித்து பார்த்தால் இருவருக்கும் வாக்குத்திருட்டு நடக்கக்கூடாது என்பதுதான்.
வாக்காளர் பட்டியல் வரும்போது யார் பெயரை நுழைக்கிறார்கள், யார் பெயரை நீக்குகிறார்கள் என்பதை விழிப்புடன் நாம் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டு நடக்காது என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. அந்த நம்பிக்கைக்கு ஆதரவாக நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும்.
தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க போன்ற கூட்டணி எல்லா இடங்களிலும் தொடரும். அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம். இது இடதுசாரி முற்போக்கு கூட்டணி; இடதுசாரி முற்போக்கு கட்சிகள் தொடர்ந்து இருக்கின்றனர். வெற்றி அல்லது தோல்வி என்பது வேறு விஷயம். நாம் தொடர்ந்து இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம்," என்றார்.