மும்பையில் விடைபெற்ற விநாயகர்: கனமழையில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில...
ஜப்பான் பிரதமர் ராஜிநாமா!
பிரதமர் மோடி ஜப்பான் சென்று பேச்சுவார்த்தை நடத்திய 10 நாள்களுக்குள் அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணமாக கடந்த மாத கடைசி வாரத்தில் சென்ற பிரதமா் நரேந்திர மோடி, டோக்கியோவில் அந்நாட்டு பிரதமா் ஷிகேரு இஷிபாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகள் சாா்ந்த 13 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
ஜப்பானில் இருநாட்டுத் தலைவர்களும் கடந்த ஆக. 29-ஆம் தேதி நேரில் சந்தித்து கைக்குலுக்கிக் கொண்ட படங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று(செப். 7) அந்நாட்டின் பிரதமர் ஷிகேரு இஷிபா(68) ராஜிநாமா செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் ஆளுங்கட்சியாக உள்ள ‘லிபரல் டெமோக்ரடிக் பார்ட்டி(எல்.டி.பி.)’ கட்சிக்குள் உள்கட்சி பூசல் பூதகரமாக வெடித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, உள்ளாட்சி தேர்தல்களிலும் ஷிகேரு தலைமையிலான ஆளுங்கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இந்த அசாதாரண அரசியல் சூழலில், தமது பதவியை ராஜிநாமா செய்வதாக அதிரடியாக அறிவித்துள்ளார் இஷிபா ஷிகேரு.
கடந்தாண்டு அக்டோபரில் ஜப்பான் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட அவர், கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர் அழுத்தாலும் இருந்தாலும், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல், ஜப்பான் பிராந்தியத்தை சுற்றியிருக்கும் சவால்கள், விலைவாசி உயர்வு ஆகிய பல காரணங்களால் தமது அரசு கடமையை தொடர்ந்து வந்த ஷிகேரு, ஞயிற்றுக்கிழமை(செப். 7) இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது தலைமையிலான ஜப்பானிய அரசு, அமெரிக்காவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாக டிரம்ப் விதித்திருந்த 25 சதவீத வரி விகிதம் இறுதியாக 15 சதவீதமாக குறைக்கப்பட்டு இவ்விரு நட்பு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், திங்கள்கிழமை ஜப்பான் நாடாளுமன்றத்தில் அவருக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததும் அவரது பதவி விலகலுக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. தேர்தல்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்டுள்ள எல்.டி.பி. அதன் கூட்டணிக் கட்சிகள் பலத்துடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில், பதவி விலகல் குறித்து ஷிகேரு இஷிபா வெளியிட்டுள்ள பொது அறிக்கையில், “நான் வகித்துவரும் லிபரல் டெமோக்ரடிக் கட்சி தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளேன். கட்சி பொதுச்செயலரிடம் இது குறித்து அறிவித்துவிட்டதுடன், அடுத்தகட்டமாக தலைவர் பதவிக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜப்பான் நாடாளுமன்ற கீழவையில் பல வாய்ந்த கட்சியாக திகழும் எல்.டி.பி.யிலிருந்து அடுத்த பிரதமர் தேர்வாவதும் உறுதியாகியுள்ளது. அடுத்த பிரதமருக்கான போட்டியில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சநே டகாய்ச்சி, ஷிஞ்ஜிரோ கோய்ஸுமி, டகாயூகி கோபாயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.