AI வளர்ச்சி: ``சிலருக்கு செல்வம், பலருக்கு வறுமை'' - எச்சரிக்கை விடுத்த ஜெஃப்ரி ஹின்டன்
தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பல்வேறு துறைகளில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உதவிகரமாக இருக்கிறது. அதே நேரத்தில், மனிதர்களின் வேலைவாய்ப்புகளை பறித்து விடும் என்ற அச்சக் குரல்களும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றும், "செயற்கை நுண்ணறிவின் தந்தை" என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹின்டன் (Geoffrey Hinton), AI தொழில்நுட்பம் சிலரை மட்டுமே பணக்காரர்களாக்கி, பெரும்பாலானோரை ஏழைகளாக்கும் அபாயம் உள்ளதாக வெளிப்படையாக எச்சரித்திருக்கிறார்.

பைனான்ஷியல் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் ஜெஃப்ரி ஹின்டன் கூறியதாவது:
"உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால், தொழிலாளர்களுக்குப் பதிலாக AI தொழில்நுட்பத்தை பணக்காரர்கள் பயன்படுத்தப் போகிறார்கள். இதனால் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை உருவாகும்; அதே சமயம் லாபத்தில் கணிசமான உயர்வும் நிகழும்," என்று அவர் எச்சரித்தார்.
ஜெஃப்ரி ஹின்டன் மேலும் கூறியதாவது:
"இந்த தொழில்நுட்பம் சிலரை மிகவும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்களை ஏழைகளாகவும் மாற்றும். ஆனால், அதற்குக் காரணம் AI அல்ல; முதலாளித்துவ அமைப்பே அதற்குக் காரணம்.
என்ன நடக்கப்போகிறது என்பதை எவரும் உறுதியாகச் சொல்ல முடியாது. அதைத் தெரிந்ததாகக் கூறுபவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
நாம் வரலாற்றின் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறோம். இது அற்புதமாக நல்லதாகவும் மாறலாம், மோசமாகவும் மாறலாம். எதுவாக இருந்தாலும், இன்று நாம் யூகிப்பது போல் விஷயங்கள் இருக்காது," என அவர் வலியுறுத்தினார்.

இதேபோல், லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியர் ரோமன் யம்போல்ஸ்கியும் கடந்த வாரம் எச்சரிக்கை மணி அடித்தார். “2030-ம் ஆண்டுக்குள் தொழிலாளர்களில் 99 சதவீதம் பேர் AI காரணமாகவே வேலையிழக்க நேரிடும்,” என்று அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் அபாயங்களை நீண்ட காலமாக வெளிப்படையாக எச்சரித்து வரும் ஜெஃப்ரி ஹின்டன் மற்றும் ரோமன் யம்போல்ஸ்கியின் இந்தக் கருத்துகள், உலகளவில் புதிய விவாதத்தை தூண்டியுள்ளன.