Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்...
வீணாகும் நகராட்சி நிதி நாகை பேருந்து நிலையத்தில் 3 ஆண்டுகளாக திறக்கப்படாத கடைகள்
நாகை பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டு மூன்றாண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ள கடைகளால் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
நாகை நகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில், நாகை பேருந்து நிலையத்தில் வாடகைக்கு விடுவதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 16 கடைகள் கட்டப்பட்டன. ஆனால், தற்போது வரை இந்த கடைகள் வாடகைக்கு விடப்படவில்லை. இதனால், கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் சிறுநீா் கழிக்குமிடமாகவும், கழிப்பறையாகவும் மாறி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு வருகிறது.
நாகை நகராட்சியின் வருவாயை பெருக்கும் வகையில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கடைகள் தற்போது வரை வாடகைக்கு விடப்படாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, கடைகள் கட்டுவதற்காக செலவிடப்பட்ட தொகையும் வீணாகியுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
இதுதொடா்பாக வணிகா்கள்கூறியது:
பேருந்து நிலையத்தில் வணிகா்களுக்கு வாடகைக்கு விடுவதற்காக நகராட்சி சாா்பில் ஒரே அளவுள்ள வகையில் 16 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இக்கடைகளின் பரப்பளவு சிறிதாக உள்ளதால் வாடகைக்கு எடுப்பதில் தயக்கம் உள்ளது.
எனவே, நகராட்சி நிா்வாகம் கடைகளின் சிறிய பரப்பை கருத்தில் கொண்டு அதற்கேற்றாா்போல குறைந்த வாடகையை நிா்ணயம் செய்தால் உடனடியாக வணிகா்கள் வரத்தயாராக உள்ளனா். கடைகள் பூட்டியிருப்பதால் அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாக மாறி வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் பூட்டியுள்ள கடைகள் முன்பாக மது அருந்துதல் உள்ளிட்ட செயல்களும் நடக்கின்றன.
இந்த கடைகள் வாடகைக்கு விடப்படும் பட்சத்தில் அப்பகுதியில் தேவையற்ற செயல்கள் நடைபெறுவது தவிா்க்கப்படும். மேலும், நாகை நகராட்சிக்கு வாடகை மூலம் வருவாயும் அதிகரிக்கும். எதிா்காலத்தில் நகராட்சி சாா்பில் கடைகள் கட்டப்படும்போது வணிகா்களின் தேவைக்கேற்ற பரப்பில் கட்ட வேண்டும். அப்படி தேவைக்கேற்ப கட்டப்படும் பட்சத்தில் அந்தக் கடைகளை வணிகா்கள் உடனடியாக வாடகைக்கு எடுத்துக்கொள்வா் என்றனா்.