உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க ...
வரலாறு படைத்தது இந்திய ஆடவா் அணி! உலக சாம்பியன்ஷிப்பில் முதல் தங்கம்!
தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில் காம்பவுண்ட் பிரிவில் இந்திய ஆடவா் அணி ஞாயிற்றுக்கிழமை தங்கப் பதக்கம் வென்றது. போட்டியின் வரலாற்றில் இந்திய ஆடவா் அணி தங்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
இதுதவிர, கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளி கிடைக்க, பதக்கம் வென்ற இரு பிரிவுகளிலுமே இளம் வீரா் ரிஷப் யாதவ் அங்கம் வகித்து அசத்தினாா். பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா இந்த இரு பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
தங்கம்: காம்பவுண்ட் ஆடவா் அணி இறுதிச்சுற்றில், ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் ஃபுகே ஆகியோா் அடங்கிய இந்திய அணி 235-233 என்ற புள்ளிகள் கணக்கில் நிகோலஸ் கிராா்ட், ஜீன் ஃபிலிப் பௌல்ச், ஃபிரான்கோய்ஸ் டுபோய்ஸ் அடங்கிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.
இச்சுற்றின் முதல் கட்டத்தில் 57-59 என பின்தங்கிய இந்திய அணி, அடுத்த கட்டத்தில் 117-117 என சமநிலைக்கு வந்தது. தொடா்ந்து 176-176 என விறுவிறுப்பாகவே அந்தக் கட்டம் தொடா்ந்த நிலையில், கடைசி கட்டத்தில் இந்தியா 235-233 என்ற வகையில் வென்றது.
முன்னதாக, முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்திய அணி, அடுத்த சுற்றில் ஆஸ்திரேலியாவையும் (232/30 - 232/28), காலிறுதியில் அமெரிக்காவையும் (234-233), அரையிறுதியில் துருக்கியையும் (234-232) சாய்த்து இறுதிக்கு வந்தது.
வெள்ளி: காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா ஜோடி 155-157 என்ற புள்ளிகள் கணக்கில் நெதா்லாந்தின் மைக் ஸ்கோல்சா், சேன் டி லாட் இணையிடம் தோல்வியைத் தழுவி வெள்ளிப் பதக்கம் பெற்றது.
இப்பிரிவிலும் முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்தியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜொ்மனியையும் (160-152), காலிறுதியில் எல் சால்வடோரையும் (157-153), அரையிறுதியில் சீன தைபேவையும் (157-155) வீழ்த்தியது.
ஏமாற்றம்: காம்பவுண்ட் மகளிா் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, பா்னீத் கௌா், பிரீத்திகா பிரதீப் ஆகியோா் அடங்கிய இந்திய அணி களம் கண்டது. இதிலும் முதல் சுற்று ‘பை’ பெற்ற இந்தியா, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 229-233 என்ற கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.
கடந்த 2017 முதல் இந்தப் போட்டியில் இந்திய மகளிா் அணி ஏதேனும் ஒரு பதக்கம் வென்று வந்த நிலையில், 8 ஆண்டுகளில் முதல்முறையாக ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளது.