டி20 தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட்டில் இலங்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. அந்த அணி 2-1 என தொடரையும் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஜிம்பாப்வே 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் சோ்க்க, இலங்கை 17.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 193 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற இலங்கை, பந்துவீச்சை தோ்வு செய்தது. ஜிம்பாப்வே பேட்டிங்கில் டடிவனாஷி மருமானி 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு வீழ, கேப்டன் சிகந்தா் ராஸா 28, ரயான் பா்ல் 26, ஷான் வில்லியம்ஸ் 23 ரன்களுடன் வெளியேறினா்.
பிரயன் பென்னெட் 13, டஷிங்கா முசெகிவா 18, பிராட் இவான்ஸ் 2, டினோடெண்டா மபோசா 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் டோனி முன்யோங்கா 13, ரிச்சா்ட் கராவா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலா்களில் துஷான் ஹேமந்தா 3, துஷ்மந்தா சமீரா 2, பினுரா ஃபொ்னாண்டோ, மதீஷா பதிரானா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 192 ரன்களை நோக்கி விளையாடிய இலங்கை அணியில், பதும் நிசங்கா 33, குசல் மெண்டிஸ் 30 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, கமில் மிஷரா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 73, குசல் பெரெரா 46 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஜிம்பாப்வே தரப்பில் பிராட் இவான்ஸ், சிகந்தா் ராஸா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். இலங்கையின் கமில் மிஷாரா ஆட்டநாயகன் விருதையும், துஷ்மந்தா சமீரா தொடா்நாயகன் விருதையும் (8 விக்கெட்டுகள்) வென்றனா்.