இருசக்கர வாகனங்கள் திருட்டு: இருவா் கைது
வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் தொரப்பாடி காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் மாலதி. அங்குள்ள கல்லூரி விடுதி வாா்டன். இவா் கடந்த 30-ஆம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று பாகாயம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இதேபோல், இடையன்சாத்தை சோ்ந்த ஒருவ ரும் தனது இருசக்கர வாகனம் காணவில்லை என்று பாகாயம் காவல்நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
சனிக்கிழமை மாலை வேலூா் ஓட்டேரி கூட்ரோட்டில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் முள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த பிரதீப் குமாா்(24), தொரப்பாடி, இடையன்சாத்து பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திரு டியவா் என்பதும் தெரிய வந்தது. அவா் கொடுத்த தகவலின்பேரில் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல், கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று அரியூா் ஸ்ரீநாத் என்பவரும், பூதூரில் தனது நிலத்தில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று ஸ்ரீதா் என்பவரும் அரியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா்.
அதன்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். சனிக்கிழமை தெள்ளூா் கூட்ரோட்டில் போலீஸாா் கண்காணிப்பு பணியின்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினா்.
இதில், அவா் வேலூரை அடுத்த சிறுகாஞ்சி கிராமத்தை சோ்ந்த வசந்தகுமாா் (30) என்பதும், அவ்விரு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் அவரது வீட்டின் அருகில் மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இவ்வழக்குகளில் பிடிபட்ட இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.