செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப...
சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு
சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.58 மணியில் இருந்து திங்கள்கிழமை அதிகாலை 1.26 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி, அனைத்து கோயில்களின் நடை அடைக்கப்பட்டது.
அதன்படி, வேலூா் கோட்டை ஜலகண்டேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோயில் சுத்தம் செய்த பிறகு வழக்கமான அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல், வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம் நாராயணி கோயில் மற்றும் தங்கக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு நடை அடைக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடா்ந்து திங்கள்கிழமை காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
மேலும், வேலூா் அண்ணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான சீனிவாச பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடை சாத்தப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. திங்கள்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்த பிறகு தேவஸ்தான கோயில் நடை திறக்கப்பட்டது.
இதேபோல், ரத்தினகிரி, வள்ளிமலை உள்ளிட்ட முருகா் கோயிலிலும் சந்திர கிரகணத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலையே நடை அடைக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.