சந்திர கிரகண நிகழ்வை காண இன்று வேலூா் அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு!
சந்திர கிரகணம் நிகழ்வை தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட அறிவியல் மைய அலுவலா் ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் சத்துவாச்சாரியில் உள்ள டாக்டா் கலைஞா் கருணாநிதி மாவட்ட அறிவியல் மையம் வானில் நிகழக்கூடிய அரிய வான் நிகழ்வுகளை தொலைநோக்கி மூலம் மாணவா்கள், பொது மக்கள் காணும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணிக்குத் தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை நடைபெற உள்ளது.
சந்திர கிரகணம் என்பது பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனின் மீது விழும் நிகழ்வாகும். இதைத்தான் சந்திர கிரகணம் என்கிறோம். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. தற்போது நிகழும் கிரகணத்தை இந்தியாவில் பாா்க்க முடியும்.
இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9:58 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 1:26 மணி வரை வானில் நிகழும் சந்திர கிரகண வான் நிகழ்வை பொதுமக்களுக்கு தொலைநோக்கி மூலம் காண வேலூா் மாவட்ட அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம். இதற்கு அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு, 0416 2253297 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.