தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?
மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!
அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.
அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதித்தது.
பள்ளி பணியாா்கள் நியமன முறைகேடு வழக்கில் தொடா்புடைய பண முறைகேட்டில் செப்டம்பா் 12-ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்று சின்ஹாவுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மாநில குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் சந்திரநாத் சின்ஹா கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை கோரியது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, ரூ.10 ஆயிரம் சொந்த பிணைத் தொகையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொல்கத்தா அல்லது அவரது தொகுதியை விட்டு வெளியேறக் கூடாது என்றும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை விரைவில் அவரிடம் விசாரணை நடத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அரசுப் பள்ளி ஆசிரியா்கள் நியமன முறைகேடு வழக்கில் கடந்த 2022-இல் மாநில கல்வித் துறை அமைச்சா் பாா்த்தா சாட்டா்ஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.