லண்டனில் பென்னிகுயிக் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!
கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் மிகவும் பிரசித்திப் பெற்ற பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்றுமுன் தினம் நிறைவடைந்தது. இது கேரளம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் கோலாகலமாகக் கொண்டாப்பட்டது. இந்தப் பண்டிகையையொட்டி பூக்காளால் ஆன அத்தப்பூ போடுவது வழக்கம்.
இந்த நிலையில், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் முத்துப்பில்லக்கில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோலம் போடப்பட்டதைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள், அதனை உடனடியாக அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதனால், காவல் துறை அதிகாரிகளுக்கும், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 27 பேர் மீது பிஎன்எஸ் பிரிவுகள் 223(அரசு உத்தரவை மீறுதல்), 192 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல்) மற்றும் 3(5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கோயில் அதிகாரிகள் கூறிய நிலையில், இது “ஆபரேஷன் சிந்தூரை கௌரவிப்பதற்காக போடப்பட்டதாக” கேரள பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.

கேரள காவல்துறையை கடுமையாக சாடிய கேரள பாஜக தலைவர்ராஜீவ் சந்திரசேகர், “கொல்லம் மாவட்டத்தில் 27 ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கேரள மாநிலம் ஜமாத்-இ-இஸ்லாமியால் ஆளப்படுகிறதா அல்லது பாகிஸ்தானின் ஆட்சியின் கீழ் உள்ளதா?. எஃப்ஐஆர் உடனடியாக திரும்பப் பெறப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக வேண்டிவரும்” என்று அவர் எச்சரித்தார்.
இதுகுறித்து கோயில் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “இது போன்ற பிரச்சினை வருவது முதல்முறை கிடையாது. கோயில் திருவிழா நாள்களில் இதுபோன்ற கொடிகளின் வடிவில் கோலமிடுவது வழக்கம். இதனால், 2023 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.
கேரளத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் இடதுசாரி முன்னணியினருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கும் இடையேயான மோதல்கள் விஸ்வரூபம் எடுக்கத் துவங்கியுள்ளன.
கேரள ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பயன்படுத்தப்படும் பாரத மாதாவின் உருவப் படத்தைக் காட்சிப்படுத்தியது மற்றும் மலப்புரத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் மாணவிகளை ஆர்எஸ்எஸ் பாடலை பாட வைத்தது என பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இதுவும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.