Bad Girl Review: புதுமையான திரைமொழியில் தனித்துவம் பெரும் படைப்பு; இந்த பேட் கேர்ள் சொல்வது என்ன?
15 வயது பள்ளி மாணவியான ரம்யாவுக்கு (அஞ்சலி சிவராமன்) காதல் மலர்கிறது. படு ஸ்ட்ரிக்ட்டான குடும்பப் பின்னணி, அவர் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கும் அவரின் அம்மாவின் (சாந்திபிரியா) கட்டுப்பாடுகள் போன்றவற்றால் எரிச்சலைடைகிறார் ரம்யா.

அதனால் பதின்பருவக் காதலையும் இழக்க நேரிடுகிறது. இதனாலேயே கல்லூரி வாழ்க்கை, கரியர் என அடுத்தடுத்த அத்தியாயங்களில் வீட்டை விட்டு விலகி வாழத் தொடங்குகிறார். அடுத்தடுத்து ரம்யாவின் வாழ்வில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேற, அவர் தேடிய காதலும், விரும்பிய சுதந்திர வாழ்க்கையும் கிடைத்ததா என்பதே அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்குயிருக்கும் இந்த 'பேட் கேர்ள்'.
ரம்யாவாக அஞ்சலி சிவராமன், ஓ.டி.டி படைப்புகளில் நடித்திருந்தாலும் இதுவே முதல் சினிமா அறிமுகம். யதார்த்தமான முகபாவங்கள், அம்மா, அப்பா என அனைவரையும் அநாயசமாகக் கையாளும் இடம், பாட்டி இறந்த வீட்டில் இயல்பாகப் பேசிவிட்டு, பின்னர் பாட்டி மீதுள்ள பாசத்தில் வெடித்து அழும் தருணம் என ஓவருக்கு ஒரு சிக்ஸர் விளாசியிருக்கிறார்.

'மேடம்' பூனையைக் காணாத பரிதவிப்பு, அம்மாவிடம் 'ஐ லவ் யூ' சொல்லும் தருணம் என எமோஷனாகவும் ஸ்கோர் செய்கிறார். ஆனாலும் டப்பிங் குரல் சில இடங்களில் உறுத்தவே செய்கிறது. படு ஸ்ட்ரிக்ட்டான அம்மாவாக மீண்டும் தமிழ் சினிமாவில் சாந்திபிரியா.
யதார்த்தமான, அதே சமயம், தான் ஒடுக்கப்படுகிறோம் என்பதே தெரியாமல் கணவனுக்கும் மாமியாருக்கும் சேவையாற்றிக்கொண்டே மகளை ஏசும் வேடத்தில் மிளிர்கிறார். 'பேர்ட் கேர்ள்'இன் தோழியாக சரண்யா ரவிச்சந்திரன், நெகிழ்ச்சி அத்தியாயம்! ரம்யாவின் வாழ்வில் இருவேறு அத்தியாயங்களில் எட்டிப் பார்க்கும் ஹ்ருது ஹரோன் நடிப்பில் முதிர்ச்சி!
ப்ரீத்தா ஜெயராமன், ஜெகதீஷ் ரவி, பிரின்ஸ் ஆண்டர்சன் என மூவர், ரம்யாவின் வாழ்வை மூன்று அத்தியாயங்களாகப் பிரித்து அழகியலுடன் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். சாதாரண அம்மா - மகள் உரையாடலில்கூட வாய்க்கு க்ளோசப், முகத்துக்கு க்ளோசப், கண்களுக்கு க்ளோசப் எனப் புது கோணம் பிடித்திருப்பது ஃப்ரெஷ்ஷான ட்ரீட்மெண்ட்!

ராதா ஸ்ரீதரின் படத்தொகுப்பிலும் இதே புதுமை எட்டிப் பார்ப்பது படத்தை வித்தியாசமானதொரு அனுபவமாக மாற்றியிருக்கிறது. இசையமைப்பாளர் அமித் திரிவேதியின் தமிழ் வருகையில் 'அப்படி என்னைப் பார்க்காதே' மற்றும் பிற மாண்டேஜ் பாடல்களிலும் இளமை வைப்! பின்னணி இசையில் விட்டிருக்கும் மௌன இடைவேளிகள், முக்கியமான காட்சியில் கடல் அலைகளின் ஒலியைத் துணைக்கு அழைப்பது என நிறைய ஹைக்கூக்கள்!
பதின்பருவத்திலிருந்து முதிர்ச்சியை நோக்கிய பயணத்தைப் பேசும் படங்கள் நமக்குப் புதிதல்ல! இந்த 'பேர்ட் கேர்ள்' அதிலிருந்து வித்தியாசப்படுவது சொல்லவரும் விஷயத்தில்தான். சின்னதொரு தனி வீடு கொடுத்துவிடும் சுதந்திரத்தை குடும்பக் கட்டுப்பாடுகளும், பழைமைவாதங்களும் எப்படித் தடுக்கின்றன என்பதை பெண்ணின் பார்வையிலேயே பேசியிருக்கிறார் இயக்குநர்.

பதின்பருவக் காதல், அதில் எழும் சிக்கல், கல்லூரியில் "நிஜமான" காதல் என்றுணர்ந்து மகிழ்ச்சியில் இருக்கும்போது வரும் பிரச்னைகள், 30 ப்ளஸ்ஸில் நண்பர்கள் அனைவரும் வாழ்வின் வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்றிருக்க, மனதுக்குள் எழும் அசௌகரியம் எனப் பல்வேறு அகப்போராட்டங்களை இயல்பாக எடுத்துரைக்கிறது படம்.
தோழியின் கரிசனம், அம்மாவின் பார்வையில் அவரை உணர்ந்து அன்பைப் பகிரும் இடம், பூனையைக் காணாமல் தேடும்போது உணரும் முன்னாள் காதலனின் கரிசனம், பள்ளிப் பருவக் காதலனின் மீள்வருகையின்போது உண்டாகும் பட்டாம்பூச்சி படப்படப்பு என சாவகாசமாக அமர்ந்து பார்த்தால் வெளிப்படும் டிராமாக்கள் மெல்லிசையை மீட்டுகின்றன. பாட்டி இறப்புக்குப் பின் அவரை முதிய தலைமுறை கொண்டாடுவதும், இளைய தலைமுறை தூற்றுவதும் சுவாரஸ்ய நகைமுரண்!

அதே சமயம், நிஜமாகவே ரம்யா விரும்புவது என்ன, படம் எதை நோக்கி செல்கிறது என்பதில் போதிய தெளிவில்லை. நாயகியும் தனக்கு வரும் அனைத்து பிரச்னைகளையும் லெஃப்ட்டில் டீல் செய்வதால் எமோஷனலாக அவரின் பரிதவிப்பு நமக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. அதேபோல பெண் சுதந்திரம் என்பது தனியொரு கூடு மட்டுமா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. மொத்தமாகவே படத்தின் எடிட்டிங்கில் நிறைய சென்சார் வெட்டுக்கள் இருப்பது, துருத்திக்கொண்டு தெரிவது படம் பார்க்கும் அனுபவத்தைப் பாதிக்கிறது!
குறைகள் இருப்பினும், பெண்ணின் அகவுணர்வை, "சென்சார்" செய்யாமல் நமக்குக் கடத்தும் 'பேட் கேர்ள்'க்கு 'குட் கேர்ள்' பட்டம் கொடுக்கலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...