``செங்கோட்டையனுக்கு உரிமை இல்லை; அவருக்குப் பின்னால் இருப்பவர் இவர்தான்'' - தளவாய் சுந்தரம் ஓபன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக வெளிப்படையாகவே பனிப்போர் நடந்து வந்தது.
இவ்வாறான சூழலில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 5) செங்கோட்டையன், அ.தி.மு.க-விலிருந்து விலகிச் சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார்.
இதில், ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா ஆகியோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

ஆனால், அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமி, கட்சிப் பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையனை நீக்கினார்.
கூடவே, கட்சிக்குள்ளேயே செங்கோட்டையனுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த முன்னாள் எம்.பி சத்தியபாமா உள்ளிட்டோரும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் இன்று (செப்டம்பர் 7) செய்தியளர்களை சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், "கட்சியில் ஆரம்ப காலத்திலிருந்தே இருக்கின்ற சீனியர் செங்கோட்டையன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், ஒரு பொதுச் செயலாளருக்கு காலக்கெடு விதிக்க இவருக்கு உரிமை கிடையாது. ஆளாளுக்கு கெடு கொடுத்தால் கட்சி எப்படி இருக்கும்.

அவர் கஷ்டப்பட்டு ஓரளவு கட்சியை வளர்த்து, மக்களைத் திரட்டி ஓட்டு சேர்த்து எம்.ஜி.ஆர் ஆட்சி, அம்மா ஆட்சி வர பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
அதற்கு உதவுவதை விட்டுவிட்டு தொந்தரவு செய்தால் எப்படி ஏற்றுக்கொள்வது.
அவரில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம் என்று ஒருத்தர் பேசிட்டு இருக்காங்க. ரத்த கதையை சொன்னவங்கதான் இதன் பின்னணியில் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமிதான் பொதுச் செயலாளர், முதலமைச்சர் என்று சொன்னால் ஒற்றுமை கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.