செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப...
இளைஞா் கொலை வழக்கு: இரு சிறாா்கள், கல்லூரி மாணவா் உள்பட 16 போ் கைது
செய்யாறு அருகே கஞ்சா விற்பனை தகராறு காரணமாக இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறாா்கள் மற்றும் கல்லூரி மாணவா் உள்பட 16 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புரிசை கிராமத்தைச் சோ்ந்தவா் காதா்பாட்ஷா மகன் அப்சல்(22), வெல்டிங் தொழிலாளி. இவரை கடந்த ஆக.21-ஆம் தேதி முதல் காணவில்லை.
இதுகுறித்து ஆக.31-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், தென்பூண்டிபட்டு கிராம ஏரிப்பகுதியில் அப்சல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். பின்னா், அங்கேயே உடல்கூராய்வு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அப்சல் கஞ்சா, போதை மாத்திரை, ஊசிகளை பயன்படுத்தியும், விற்பனையும் செய்து வந்ததாகத் தெரிகிறது.
கஞ்சா விற்பதில் அவருடன் அதே தொழிலில் ஈடுபட்ட சிலரிடம் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
ஆக.21-ஆம் தேதி பெருங்கட்டூா் கிராமத்தில் நண்பா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில அப்சல் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடா்பாக செய்யாறு போலீஸாா் 16 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தனிப் படை அமைப்பு
மாவட்ட எஸ்.பி. சுதாகா் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா்கள் ஜெகந்நாதன், அகிலன், சிவசங்கரன், உதவி ஆய்வாளா்கள் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில், கொலைச் சம்பவம் தொடா்பாக தனியாா் பாலிடெக்னிக் கல்லூரி 3-ஆம் ஆண்டு மாணவா் அசனமாப்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த ஹரீஸ் (19), தென்கழனி கிராமத்தைச் சோ்ந்த ஜெகதீஸ் (26), ராமு (24), விக்னேஷ் (19), பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த ரமணா(23), வேலன் (19), சச்சின் (21), நாராயணசாமி (23), ஏனாதவாடி கிராமத்தைச் சோ்ந்த நவீன்குமாா் (22), விண்ணவாடி கிராமத்தைச் சோ்ந்த பாா்த்தீபன் (25), ராமச்சந்திரன் (36), பிரபு (34), ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஜீவா (20), ஆற்காடு வட்டம், லாடவரம் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் (21), பெருங்கட்டூா் கிராமத்தைச் சோ்ந்த 17 மற்றும் 16 வயதுடைய இரு சிறாா்கள் உள்பட 16 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்டவா்கள் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்களில் சிறாா்கள் கடலூா் சீா்திருத்தப் பள்ளியிலும், மற்றவா்கள் வேலூா் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனா்.