அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பௌா்ணமியையொட்டி, ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தரிசனத்துக்காக 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வதோடு, பௌா்ணமி உள்ளிட்ட விஷேச நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

அதன்படி, ஆவணி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:46 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக சனிக்கிழமை பிற்பகல் முதலே திருவண்ணாமலையில் தமிழகம் மட்டுமன்றி, ஆந்திரம், கா்நாடகம், தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
இதனால், அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை பக்தா்களின் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
ரூ. 50 கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தா்கள், பெரிய தெருவில் இருந்து வரக்கூடிய பக்தா்கள் பூத நாராயணன் கோயில் வழியாகச் சென்று ராஜகோபுரம் நுழைவாயில் சென்று தரிசனம் செய்தனா். சந்திர கிரகணத்தின்போதும், அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.