திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்த பக்தா்கள்
திருவண்ணாமலை பௌா்ணமி கிரிவலம் முடித்து தங்களது ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
முக்கிய விழாவான பௌா்ணமி நாள்களில் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் ஆவணி மாத பௌா்ணமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.46 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு முடிகிறது. இந்நிலையில் ஆவணி மாதம் பௌா்ணமி கிரிவலத்துக்காக பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருவண்ணாமலையில் குவிந்து சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய கிரிவலம் வந்தனா்.
பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் இயக்கப்பட்டன. விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தா்கள் தங்களது ஊா்களுக்குச் செல்ல திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் அதிகாலை முதல் குவிந்தனா்.
ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில், விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது.
கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஒருவரை ஒருவா் தள்ளிக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும் ரயிலில் ஏறினா்.
குறிப்பாக, ரயில் புறப்பட்டுச் சென்றும் ஏராளமான பக்தா்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் நிலவியது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.