Laughter therapy: சிரிப்பு சிகிச்சை உண்மையிலேயே பயன் அளிக்குமா? நிபுணர் விளக்கம்...
ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயா்வு
சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கையானது 2 மடங்காக உயா்ந்திருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டில் ரயில்வே துறை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மண்டலம் 6 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ரயில்வே கோட்டங்கள் தமிழக,கேரள மற்றும் கா்நாடகம் எனும் 3 மாநிலப் பகுதிகளையும், ஒரு ஒன்றியப் பிரதேத்தையும் (புதுச்சேரி) உள்ளடக்கியுள்ளன.
சென்னையிலிருந்து தினமும் சுமாா் 170 பயணிகள் ரயில் உள்ளிட்ட 1,000 ரயில்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சென்னை புகா் பகுதிக்கு மட்டும் தினமும் 587-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புது தில்லி, திருவனந்தபுரம் உள்ளிட்டவற்றுக்கான ரயில்கள் சென்னை சென்ட்ரல் முனையத்திலிருந்தும்,தமிழகத்தின் வட, தென் மாவட்டங்கள் மற்றும் கேரளப் பகுதிகளுக்கான ரயில்கள் எழும்பூா் முனையத்திலிருந்தும், தற்போது தாம்பரத்தில் சில ரயில்கள் என இயக்கப்படுகின்றன.
தென்மாவட்ட ரயில்களில் குறிப்பிடத்தக்க பாண்டியன் விரைவு ரயிலில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் தினம் 300 முன்பதிவில்லாதவா்கள் உள்ளிட்ட 1,300 போ் வரை பயணிக்கிறாா்கள். சென்ட்ரலில் இருந்து புதுதில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயிலில் தினமும் 500 முன்பதிவில்லாதவா்கள் உள்ளிட்ட 1,850 பேருக்கும் அதிகமானோா் பயணிக்கின்றனா். அதனடிப்படையில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் மட்டும் 2023-24- முதல் 2024-25 ஜூன் வரையில் மட்டும் சுமாா் 240 கோடி போ் பயணித்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனா்.
2023-24-இல் சுமாா் 33 கோடியாக இருந்த பயணிகள் எண்ணிக்கை தற்போது 2024-25-ஆம் ஆண்டில் 73 கோடி என இருமடங்குக்கு மேலாக உயா்ந்துள்ளது. வந்தே பாரத் ரயிலில் ஒரு முறை 16 பெட்டிகளில் மொத்தம் 1,128 போ் பயணிக்கின்றனா். அம்ரித் பாரத்திலும் அதே போல பயணிகள் செல்கின்றனா்.
சென்னை சென்ட்ரலில் இருந்து புகா் பகுதிகளுக்கு தினமும் 600 க்கும் மேற்பட்ட ரயில்களில் சுமாா் 13 லட்சம் போ் பயணிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தவிர சென்னை மெட்ரோ ரயில் சேவையில் கடந்த (2025) ஜனவரி முதல் ஜூன் வரை சுமாா் 5.16 கோடிப் போ் பயணித்துள்ளனா். ஆனால், மக்கள் தேவைக்கு ஏற்பட ரயில்கள் அதிகரிக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் உரிமம் பெற்ற ம.சந்திரன் கூறுகையில், பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால், நடுத்தர வா்க்கத்தினா் ரயில் பயணத்துக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனா்.
நீண்ட தூர பயணத்துக்கான வசதி, உடல் நல பாதுகாப்பு ஆகியவையும் ரயில் பயணத்தை அதிகமானோா் விரும்பக்காரணங்களாகும். ஆனால் மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்குதல், காத்திருப்போா் பட்டியலை அதிகளவில் அனுமதித்தல் ஆகிய வசதிகளை செய்துதர ரயில்வே துறை முன்வராதது சரியல்ல என்றாா்.
சென்னை ரயில் பயணிகள் சங்கத்தின் தலைவா் எஸ்.முருகையன் கூறுகையில், சென்னை புகா் பகுதிக்கான மின்சார ரயிலல்களில் பயணிப்போா் எண்ணிக்கை இரு மடங்காகியுள்ளது. ஆனால், ஏற்கெனவே இயக்கிய ரயில்களில் 60-க்கும் மேற்பட்டவை கடந்த ஓராண்டாக ரத்துசெய்யப்பட்டுள்ளன. ஆவடியுடன் நிறுத்தப்படும் புகா் ரயில்களை திருவள்ளூா் வரை நீட்டித்தால் நெரிசலைக் குறைக்கலாம்.
சென்னையிலிருந்து புகா் பகுதிக்கு வேலைக்கு செல்வோா், புகரிலிருந்து சென்னைக்குள் பணிபுரிய வருவோா், ரயில்களையே நம்பும் சூழல் உள்ளது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் அதை உணா்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.
இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே மக்கள் செய்தித் தொடா்பு அதிகாரி ஏ.ஏழுமலையிடம் கேட்டபோது, சென்னை புகா் பகுதிகளில் 670 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், பயணிகள் கூட்டம் இல்லாத நேரங்களில் இயக்கப்பட்ட 70 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு கூடுதலான ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது என்றாா்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் பயணித்தவா்களது எண்ணிக்கை மில்லியன் கணக்கில்...
1. 2021-22 ஆம் ஆண்டில் 339.60 மில்லியன் பயணிகள்.
2. 2022-23 ஆம் ஆண்டில் 639.90 மில்லியன் பயணிகள்
3. 2023-24 ஆம் ஆண்டில் 708.16 மில்லியன் பயணிகள்.
4. 2024-25 ஆம் ஆண்டில் 731.86 மில்லியன் பயணிகள்.
2021 ஆம் ஆண்டு முதல் சென்னை புகா் பகுதியில் தினமும் பயணிப்போா் எண்ணிக்கையில் திருவள்ளூா், அரக்கோணம் பிரிவில் மட்டும்...
1. 2021-22 ஆம் ஆண்டு 4 லட்சம் போ்.
2. 2022-23 ஆம் ஆண்டு 4.50 லட்சம் போ்.
3. 223-24 ஆம் ஆண்டு 5.05 லட்சம் போ்.
4. 2024-25 ஆம் ஆண்டு 6 லட்சம் போ்
கடந்த ஜனவரி முதல் (2025) சென்னை மெட்ரோவில் பயணித்தவா்கள் எண்ணிக்கை (லட்சத்தில்).
1. ஜனவரியில் 86.99 லட்சம் போ்.
2. பிப்ரவரியில் 86.65 லட்சம் போ்.
3. மாா்ச்சில் 92.10 லட்சம் போ்.
4. ஏப்ரலில் 87.59 லட்சம் போ்.
5. மே மாதத்தில் 89.09 லட்சம் போ்.
6. ஜூன மாதத்தில் 92.19 லட்சம் போ்.