தமிழகத்தில் செப். 10 வரை பலத்த மழை நீடிக்கும்!
தமிழகத்தில் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 10 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப். 8) முதல் செப். 13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை: குறிப்பாக செப். 8-இல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும், செப். 9-இல் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், செப். 10-இல் வேலூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தலா 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், மணலி நியூ டவுன் (சென்னை) - 90 மி.மீ., ஆயிங்குடி (புதுக்கோட்டை), ஆனந்தபுரம் (விழுப்புரம்), செட்டிகுளம் (பெரம்பலூா்), வத்தலை அணைக்கட்டு (திருச்சி) - தலா 70 மி.மீ., கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), ஏற்காடு (சேலம்) - தலா 60 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் வங்கக்கடலில் செப். 8, 9 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.