தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் போராட்டம்
"நாளொன்றிற்கு 3000 மனுக்கள் பெறப்பட்டாலும் பெண் அலுவலர்கள் என்று கூட பாராமல் இரவு 12 மணி வரை மனுக்களை பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்" என்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டி போராட்டம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன், "வருவாய்த் துறையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலமாக சொல்ல முடியாத துயரங்களை, வருவாய்துறை ஊழியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களும் சந்தித்து வருகின்றனர்.
இந்த திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்காமல், இரவு பகல் பாராமல் பணியாற்றக்கூடிய சூழ்நிலைக்கு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நிர்பந்திக்கிறது.
இது சம்பந்தமாக தீர்வு ஏற்படுத்த பலமுறை பேசியும், எந்த தீர்வும் ஏற்படாத நிலையில், செப்டம்பர் 25ஆம் தேதி முதல் வருவாய்த்துறையில் பணியாற்றும் 40 ஆயிரம் அலுவலர்கள், சிறப்பு திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை முழுமையாக புறக்கணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அனைத்து மாவட்ட, வட்ட தலைமை இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

45 நாள்கள் அவகாசம்
சனிக்கிழமைகளில் ஆய்வு மற்றும் முகாம் பணிகளை நடத்தக்கூடாது என தமிழக அரசை வலியுறுத்துகிறோம். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அவசரப் பணியை தவிர, மற்ற பணிகள் பணியாளர்களுக்கு வழங்கக் கூடாது.
வருவாய்த் துறையினருக்கான பணி பாதுகாப்பு சட்டம் கருணை அடிப்படையில் பணி நியமனக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தரப்படும் மனுக்களுக்கு 45 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டாலும், மாவட்ட ஆட்சியர்கள் இந்த திட்டங்களை தங்களது மாவட்டத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக போதிய கால அவகாசம் வழங்கவில்லை.
நாளொன்றிற்கு 3000 மனுக்கள்
மாவட்ட ஆட்சியர்கள் இதுபோன்ற கால அவகாசம் வழங்காமல் நிர்பந்திப்பதால், பொதுமக்களுக்கு சேர வேண்டிய நன்மைகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு ஏற்படாத நிலையில், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

நாளொன்றிற்கு 3000 மனுக்கள் பெறப்பட்டாலும், பெண் அலுவலர்கள் என்று கூட பாராமல் இரவு 12 மணி வரை மனுக்களை பதிவேற்றம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.
மறுதினம் மற்றொரு முகாமிற்கான பணிகளை செய்ய வேண்டி உள்ளது. தொடர்ச்சியாக இந்த முகாம்கள் நடத்தப்படுவதால் மக்களின் பிற பணிகள் பாதிக்கப்படுகின்றன.
இந்தத் திட்டத்தை அரசு ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியிருக்க வேண்டும்; ஆறு மாதத்தில் பத்தாயிரம் முகாம்களை நடத்தி முடிப்பது இயலாத காரியம். ஆனால் அரசு ஆறு மாதத்தில் இந்த முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதால், வருவாய்த்துறை அலுவலர்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என்றார்.