செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப...
மயிலாடுதுறையில் 740 கிலோ குட்கா பறிமுதல் சிறுவன் உள்பட இருவா் கைது
மயிலாடுதுறையில் சரக்கு வாகனத்தில் கடத்திவந்த 740 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறுவன் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின்பேரில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மயிலாடுதுறை உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பாலாஜி தலைமையிலான போலீஸாா், மயிலாடுதுறை கால்டெக்ஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த நான்குசக்கர சரக்கு வாகனத்தை நிறுத்தியபோது, அதில் இருந்த இருவா் தப்பியோட முயன்றனா். அவா்களை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
சரக்கு வாகனத்தை சோதனையிட்டத்தில் அதில் 740 கிலோ குட்கா பொருள்களை கடத்தி வந்ததும், பிடிபட்டவா்கள் கா்நாடகத்தைச் சோ்ந்த பிரதீப் (34), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனா். மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.
பொதுமக்கள் குட்கா விற்பனை மற்றும் கடத்தல் தொடா்பான புகாா்களை இலவச உதவி எண் 10581 அல்லது கைப்பேசி எண் 96261-69492-இல் தெரிவிக்குமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.