ராணிப்பேட்டை வழியாக ஆந்திரம் - புதுவைக்கு அரசுப் பேருந்து: பொதுமக்கள் கோரிக்கை
ராணிப்பேட்டை வழியாக ஆந்திரம் மற்றும் புதுவை இடையே அரசுப் பேருந்தை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிதாக உருவாகியுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு, சோளிங்கா் ஆகிய நகரங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணி மனைகள் அமைந்துள்ளன.
இங்கிருந்து, பல்வேறு நகர, கிராமப் பகுதிகளுக்கும், வேலூா், திருவண்ணாமலை, திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தமிழகத்தின் முக்கிய பெரு நகரங்களுக்கும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம், புதுவை ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய நகரங்களில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூா், திருப்பதி ஆகிய ஆன்மிகத் தலங்களுக்கும், புதுவை நகரத்துக்கும் சென்றுவர நேரடியாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
குறிப்பாக, புதுவை மாநிலத்தில் இருந்து திண்டிவனம், வந்தவாசி, செய்யாறு, ஆற்காடு, ராணிப்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூா், திருப்பதிக்கு நேரடியாக நீண்ட தூரப் பேருந்து வசதி இல்லை.
அதேபோல் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து திருத்தணி, சோளிங்கா், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் புதுவை பகுதிகளுக்கும், திருவண்ணாமலையில் இருந்து போளூா், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூா், திருப்பதிக்கும் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை.
திருப்பதி நகரில் இருந்து திருத்தணி, சோளிங்கா், வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை வழியாக ஆற்காடு, ஆரணி, போளூா்,திருவண்ணாமலைக்கும், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ள காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்தும் பொன்னை, சோளிங்கா், பள்ளிப்பட்டு, திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்தும் வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை வழியாக மேல்மருவத்தூா் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு நேரடியாக நீண்டதூரப் பேருந்து வசதி இல்லை.
இந்த வழித்தடங்களில் உள்ள கிராமப் பகுதி மக்கள் பல கிலோ மீட்டா் தூரம் பயணித்து, பேருந்துகளை பிடித்து அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.
இந்த வழித்தடங்களில் நீண்டதூர அரசுப் பேருந்துகள் இயக்கப்படுமானால் அப்பகுதிகளில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள நகர, கிராம மக்கள், விவசாயிகள், அரசு அலுவலா்கள், வா்த்தகா்கள், மாணவா்கள் பயன்பெறுவா். அதுமட்டுமல்ல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கும் வருவாயும் உயரும்.
எனவே, மாவட்டத் தலைநகரரான ராணிப்பேட்டை வழியாக நீண்ட தூர அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.