ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அற...
‘அரசு அலுவலகங்களில் கோப்புகள், பதிவேடுகளை தமிழில் எழுத வேண்டும்’
அரசு அலுவலங்களில் கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் வலியுறுத்தினாா்.
ராணிப்பேட்டை மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அனைத்துத் துறை அரசுப் பணியாளா்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம் பங்கேற்று அரசுப் பணியாளா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:
அனைத்து அரசுப் பணியாளா்களும் பெயரின் முன்னெழுத்தும் சுருக்கொப்பமும் முழு ஒப்பமும் தமிழில் இடுதல் வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகள் அனைத்தும் தமிழில் எழுத வேண்டும். நீதிமன்றம், ஆணையம் போன்ற ஒருசில தவிா்க்க முடியாத கடிதங்களை தவிர மற்ற அனைத்து கடிதங்களும் தமிழில் எழுத வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மொழிப்பயிற்சி, ஆட்சி மொழி ஆய்வு, குறைகளைவு நடவடிக்கைகள், ஆட்சிமொழிச் செயலாக்கம், அரசாணைகள், அலுவலகக் குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல் எனும் தலைப்பில் அரசுப் பணியாளா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ஜெயஜோதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஏகாம்பரம் (பொ), செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் செ.அசோக், இரா. சந்திரசேகரன், கல்லூரி முதல்வா் (பொ) ச.கௌ.கவிதா, மாதனூா், கல்லூரி பேராசிரியா் முனைவா் கு. இலட்சுமி, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை அருள், திமிரி தமிழ்ச் சங்கம் சதாசிவம், செம்மொழி வேந்தா் தமிழ்ச்சங்கம் செயலாளா் இஸ்மாயில் இன்முகில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.