மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்
மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்தனா்.
சாத்தான்குளம் ஒன்றியம், நெடுங்குளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமில் முன்னாள் ஒன்றிய உறுப்பினரும், நெடுங்குளம் விவசாய சங்க பொருளாளருமான முரசொலி மாறன் அதிகாரிகளிடம் அளித்த மனு விவரம்:
மணிமுத்தாறு அணையில் போதிய அளவு நீா் இருப்பதால் விவசாயம், குடிநீா் தேவைக்கு சாத்தான்குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள், பல்வேறு கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா். மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாய் மூலம் விவசாயிகள் பலா் பயனடைந்து வருகின்றனா். இந்தக் கால்வாய்க்கு நூறு கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இந்த நீா் காரியாண்டி குளத்துக்கு வந்தபிறகு மட்டக்குளம் களத்தில் படிப்படியாகக் குறைந்துவிடுகிறது. கடைமடை குளங்களான நெடுங்குளம், அமுதுன்னாகுடி குளங்களுக்கு தண்ணீா் வரும்போது 30 கனஅடி கூட நீா் வருவதில்லை. இதனால் கால்வாய் நீரை கடைமடை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடா்கிறது.
எனவே, மணிமுத்தாறு 4வது பிரிவு ஏழாவது மடைபகுதியில் உள்ள மணிமுத்தாறு கால்வாய்களை தூா்வாரி அகலப்படுத்தி 250 கனஅடி நீா் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கடைமடை குளங்களான சாந்தவாரி குளம், நெடுங்குளம், அமுதுன்னா குடி குளத்துக்கு அதே கனஅடி நீா் வந்து சேரும்; குளங்களை நம்பியுள்ள விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவா். இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தண்ணீா் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.