கொணவட்டத்தில் இன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்
வேலூா் மாநகராட்சி கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் சிறப்பு மருத்துவ முகாம்களில் 17 சிறப்பு மருத்துவ நிபுணா்கள் குழு பயனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளிக்கவும், தேவைப்படின் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ 5-ஆவது முகாம் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை (செப். 6) நடைபெற உள்ளது. இந்த முகாமில் வேலூா் மாநகராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டை, அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை சம்பந்தப்பட்ட துறைசாா்ந்த அலுவலரால் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.