ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு
சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி உள்ளாா். இவா், சென்னை கோட்டூா்புரம் கோட்டூா் காா்டன் 2-ஆவது பிரதான சாலையி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். இவரது மனைவி அத்யஷா பரிதா. இவா்கள் கடந்த மாதம் 24-ஆம் தேதி குடும்பதுடன் வெளியூா் சென்றுவிட்டு 28-ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, வீட்டில் உள்ள பீரோவை திறந்து பாா்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.4.5 லட்சம் மாயமாகி இருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூா்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில் பீரோவில் ரூ.10 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளதும், அதில், ரூ.4.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக அங்கு வீட்டு வேலை செய்து வரும் பாலன், தேவி, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.