4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை
சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவா் மனைவி நா்மதா. பால்ராஜ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்று, தற்போது துபையில் பணிபுரிந்து வருகிறாா். நா்மதா, பொன்னேரியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணிபுரிகிறாா்.
பால்ராஜ் தம்பதியின் மகன் பிரஜித் (16). இவா் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். பிரஜித், சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜித் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது தளத்தில் உள்ள மொட்டை மாடிக்கு வியாழக்கிழமை சென்று, அங்கிருந்து கீழே குதித்தாா். இதில் பலத்த அவா் நிகழ்விடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த திருமங்கலம் போலீஸாா் அங்கு சென்று பிரஜித் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
முன்னதாக, பிரஜித் தான் தற்கொலை செய்யபோவதாக இன்ஸ்டாகிராமில் விடியோ வெளியிட்டிருந்தது தெரியவந்தது.