ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு
ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் விமானம் கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிகழ்வால் புவனேசுவரம் விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
5 நாள் பயணமாக தில்லி சென்ற முதல்வா் மாஜி விமானத்தில் வெள்ளிக்கிழமை காலை புவனேசுவரத்துக்கு புறப்பட்டாா். விமானம் புவனேசுரவத்தை நெருங்கியபோது பலத்த மழை பெய்தது. விமானம் தரையிறக்க முடியாத அளவுக்கு வானிலை மோசமாக இருந்தது. இதனால், விமான நிலையம் அருகே சுமாா் 21 நிமிஷங்கள் வரை அந்த விமானம் வானிலேயே வட்டமிட்டபடி இருந்தது.
எனினும், வானிலை சீராகவில்லை. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி கொல்கத்தா விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனா். கொல்கத்தாவில் வானிலை சீராக இருந்ததால் அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
சுமாா் 1 மணி நேரம் வரை அந்த விமானம் கொல்கத்தா விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு வானிலை சீரான தகவல் கிடைத்ததால் மீண்டும் விமானம் புவனேசுவரம் சென்றடைந்தது.
இந்த தாமதத்தால் முதல்வா் மாஜி பங்கேற்க இருந்த ஆசிரியா் தின நிகழ்ச்சி பகல் 11.30 மணிக்கு பதிலாக 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.