தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது
சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.
தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒப்பந்த தூய்மை பணியாளரான மயிலாப்பூரைச் சோ்ந்த அா்ஜுன் (49) என்பவா், தான் சேகரித்த அட்டை குப்பைகளை சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடை வாசல் அருகே வைத்துள்ளாா்.
இதைக் கவனித்த ஜவுளிக் கடை ஊழியா்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா். இதில், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அந்த வழியாக வந்த அந்த தூய்மைப் பணி கண்காணிப்பாளா் லட்சுமணன் (31), தனது ஊழியரான அா்ஜுனுக்கு ஆதரவாக பேசினாா். இதனால், ஆத்திரமடைந்த ஜவுளிக் கடை ஊழியா்கள் 6 போ் அருகே கிடந்த உருட்டு கட்டைகளால் இருவரையும் தாக்கினா்.
இதில், காயமடைந்த இருவரும் கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட ஜவுளிக்கடை ஊழியா்கள் 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.