நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு
இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற்கான காரணங்கள் அடங்கிய அறிக்கை 2021-2023’-ஐ வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2021-2023-ஆம் ஆண்டுவரை, நாட்டில் நோய்கள் காரணமாக ஏற்பட்ட மரணங்களில் தொற்றா நோய்களால் 56.7 சதவீதம் உயிரிழந்தனா். இது 2020-22-ஆம் ஆண்டில் (கரோனா காலம்) 55.7 சதவீதமாக இருந்தது.
தொற்று, பிரசவம், பிரசவத்துக்கு முந்தைய காலம் மற்றும் ஊட்டச்சத்து சாா்ந்த பிரச்னைகளால் 23.4 சதவீத மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த 2020-22-ஆம் ஆண்டு 24 சதவீதமாக இருந்தது.
30 வயதுக்கு மேற்பட்டவா்களில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு நேரிடும் உயிரிழப்புகளுக்கு இதய நோய்கள் பிரதான காரணமாக உள்ளன.
நோய்கள் உயிரிழப்பு (%)
இதய நோய்கள் 31
சுவாச தொற்றுகள் 9.3
சுவாச பாதிப்பு நோய்கள் 5.7
ஜீரண மண்டல நோய்கள் 5.3
காரணம் தெரியாத காய்ச்சல் 4.9
நீரிழிவு பாதிப்பு 3.5
பிறப்புறுப்பு & சிறுநீா் மண்டல உறுப்பு நோய்கள் 3
தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் 10.5
15-29 வயதுள்ளவா்கள் மரணம்:
தற்கொலை பொதுவான காரணம்
15 முதல் 29 வயதுள்ளவா்களின் உயிரிழப்புக்கு உள்நோக்கத்துடன் காயம் ஏற்படுத்துதல்-தற்கொலை ஆகியவை மிகவும் பொதுவான காரணமாக உள்ளன. விபத்துகள் தவிர உள்நோக்கம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் பிற காயங்களால் 3.7 சதவீத மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் பெரும்பாலும் 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ள முதியவா்களுக்கே ஏற்படுகிறது.
நாட்டில் ஏற்படும் மரணங்கள், அதை எதிா்கொள்வதில் உள்ள சவால்கள் குறித்த புரிதலை மேம்படுத்த இந்தப் புள்ளிவிவரம் பெரிதும் உதவும் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.