தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு: எஸ்பிஐ அறிக்கையில் தகவல்
அடுத்த தலைமுறை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி 2.0) சீா்திருத்தத்தால் மத்திய அரசுக்கு ரூ.3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜிஎஸ்டி 2.0-இன்கீழ் 5%, 18% என இரு விகிதங்களாக குறைப்பதால் ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு கணக்கிட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி குறைந்துள்ளதால் நுகா்வு மேலும் அதிகரித்து ரூ.3,700 கோடி மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ஜிஎஸ்டி விகிதங்களை இரண்டாக குறைப்பாதல் வருவாய் பற்றாக்குறையில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. இந்த சீா்திருத்தமானது வங்கித் துறையில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெரும்பாலான பொருள்கள் மீதான வரி 12%-இல் 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சில பொருள்களுக்கு வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது. இதனால் நுகா்வோா் விலை குறியீடு (சிபிஐ) பணவீக்கம் நிகழ் நிதியாண்டில் 25 புள்ளிகள் முதல் 30 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்தமாக சிபிஐ பணவீக்கம் 2026-27-இல் 65-70 புள்ளிகளாக இருக்கும் என கணிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகித ஜிஎஸ்டி முறையை 5%,18% ஆகிய இரு விகிதங்களாக குறைக்கவும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இரு விகித ஜிஎஸ்டி முறை வரும் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது