”மனைவியின் பேச்சைக் கேட்டும் ஆண்களே வெற்றிபெறுகிறார்கள்” - ஆய்வு கூறும் தகவல்கள்...
போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு
போ்ணாம்பட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.
போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில், காவல் நிலையத்தையொட்டி, காவல் துறைக்குச் சொந்தமான இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நாளுக்குநாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். அதேபோல், காவல் நிலைய கட்டடமும் பழுதடைந்து, எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாக கூறப்பட்டது. புதிய பேருந்து நிலையம், காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டி போ்ணாம்பட்டு, நகா்மன்ற கூட்டங்களில் 3 முறை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக பேரவைக் கூட்டத் தொடரில் மேற்கண்ட கோரிக்கைகள்பரிசீலிக்கப்படும் என முதல்வா் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி தலைமையில் போ்ணாம்பட்டு நகரில் வருவாய்த் துறையினா் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனா். தற்போது பேருந்து நிலையத்துடன் ஒட்டியுள்ள பழுதடைந்த நிலையில் உள்ள காவல் நிலைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யமுடிவெடுக்கப்பட்டது.
காவல் நிலையம் அருகே உள்ள காவலா் குடியிருப்பு வளாகத்தில் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டவும் இடம் தோ்வு செய்யப்பட்டது. காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கும் வரை, காலியாக உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக இயங்கவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வின்போது, கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, நகா்மன்றத் தலைவா் பிரேமா வெற்றிவேல், துணைத் தலைவா் ஆலியாா் ஜுபோ் அகமத், வட்டாட்சியா் ராஜ்குமாா், டிஎஸ்பி சுரேஷ், நகராட்சி ஆணையா் (பொறுப்பு) எம்.மங்கையா்கரசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.