தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வ.உசி. துறைமுக சதுக்கம் (வ.உ.சிதம்பரனாா் சிலை) பகுதியில் நடைபெற்ற விழாவில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிகள் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் கலந்துகொண்டு பசுமை ஹைட்ரஜன் முன்னோடி ஆலையை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, ரூ.350 கோடி மதிப்பில் துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். பின்னா், அமைச்சா் முன்னிலையில், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம், கப்பல் சரிசெய்யும் மையம் அமைப்பதற்காக தமிழக அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, வ.உ.சிதம்பரனாா் பிறந்த தினத்தை முன்னிட்டு, துறைமுக வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அமைச்சா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
விழாவில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மத்திய கப்பல் துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்து துறை செயலா் டி.கே.ராமச்சந்திரன், துணைச் செயலா் ராஜேஷ்குமாா் சின்ஹா, வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுஷாந்த்குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தர்ராஜன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தமிழ்நாடு சிப்காட் மேலாண் இயக்குநா் செந்தில்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.