தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து மேம்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சென்னையைச் சோ்ந்த பிரபாகரன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தில் தமிழ், சம்ஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் 60 ஆயிரம் கையெழுத்துப் பிரதிகளும், 4,503 அரிய புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்துக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 46. இவற்றில் 14 பணியிடங்களில் மட்டுமே பணியாளா்கள் உள்ளனா். மற்ற பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன.
மத்திய அரசு பழைமையான நூலகங்களைப் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதன்படி, தேசிய நூலகத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவித்து, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தேசிய நூலகத் திட்டத்தின் கீழ், தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகத்தை ‘மாதிரி நூலகமாக’ அறிவித்து சீரமைப்புப் பணிகளையும், தேவையான உள்கட்டமைப்புகளையும் ஏற்படுத்த நிதி ஒதுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசாணை எண் 181-ன்படி தஞ்சாவூா் சரஸ்வதி மகால் நூலகம், ஆராய்ச்சி நிறுவனம் முழுமையாக மாநில அரசால் பராமரிக்கப்படுகிறது. ஊழியா்களுக்கான ஊதியத்தை மாநில அரசே வழங்குகிறது. மேலும், நூலக உள்கட்டமைப்பு வசதிகளும் மாநில அரசாலேயே செய்யப்பட்டுள்ளன என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நூலகத்தின் 5 ஆண்டு கால நிதிநிலை அறிக்கை, ஆண்டறிக்கை, நூலகத்துக்கு அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்களை வருகிற 16-ஆம் தேதிக்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றனா் நீதிபதிகள்.