போராட்டம் நடத்தியவா்கள் மீதான வழக்கு ரத்து
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தக் கோரி, போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை ரத்து செய்து உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சிக்கந்தா், அப்துல் மஜீத் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தொண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரியும், ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்தக் கோரியும், உரிய அனுமதியுடன் தொண்டியில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, மருத்துவமனை எதிரேயுள்ள சாலையில் அமா்ந்து சிலா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
எனவே, மக்களின் அடிப்படை தேவைகளுக்காகப் போராடியவா்கள் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா் மோகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, போராட்ட வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்துள்ளது. அடிப்படை தேவைகளுக்காக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை என மனுதாரா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்தப் போராட்டம் தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன என்றாா்.