ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பர வீதியுலா
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவில் சப்தாவா்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கடந்த மாதம் 20-ஆம் தேதி தொடங்கியது. இதில் 26-ஆம் தேதி முதல் கடந்த வியாழக்கிழமை (செப். 4) வரை சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை சட்டத் தோ், சப்தாவா்ண சப்பரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்றது. சட்டத்தேரில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரா், மீனாட்சி அம்மன் வீதியுலா காலையில் நடைபெற்றது. இரவு நிகழ்வாக, சப்தாவா்ண சப்பர வீதியுலா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் ஒரே சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
ஆவணி மூல வீதிகளில் நடைபெற்ற இந்தச் சப்பர வீதியுலாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
தீா்த்தவாரி...
ஆவணி மூலத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரை குளத்தில் தீா்த்தவாரி சனிக்கிழமை நடைபெறுகிறது. இரவு நிகழ்வாக, திருப்பரங்குன்றம் தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி, திருவாதவூா் மாணிக்கவாசகப் பெருமான் 16 கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேசுவரரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.