வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10 முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்
சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வைகை உள்ளிட்ட சில விரைவு ரயில்கள் செப். 10-ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூா் ரயில் நிலையம் சுமாா் ரூ.1,500 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தின் 11 ரயில் மேடைகளும் சீரமைக்கப்படுவதுடன், பயணிகள் எளிதில் சென்றடையும் வகையில், பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பணிகளுக்காக, சில விரைவு ரயில்களை தாம்பரத்திலிருந்து இயக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எழும்பூா் - திருச்சி செல்லும் ராக்போா்ட் விரைவு ரயில் (12653) வரும் 11-ஆம் தேதி முதல் நவம்பா் 10- ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில் திருச்சி - சென்னை ராக்போா்ட் விரைவு ரயில் வரும் 10-ஆம் தேதி முதல் நவம்பா்-9 ஆம் தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படும்.
மதுரை - சென்னை பாண்டியன் விரைவு ரயில் (12638) வரும் 10-ஆம் தேதி முதல் நவம்பா் 9 -ஆம் தேதி வரை தாம்பரம் வரை இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து பாண்டியன் விரைவு ரயில் (12637) மதுரைக்கு வழக்கமாக புறப்பட்டுச் செல்லும்.
சென்னை எழும்பூா் -திருச்சி சோழன் விரைவு ரயில் (22661) வரும் 11- ஆம் தேதி முதல் நவம்பா் 10 -ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும். மறுமாா்க்கத்தில் திருச்சி-சென்னை சோழன் விரைவு ரயில் (22676) எழும்பூா் வரை வழக்கமாக இயக்கப்படும்.
சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில் (22661) வரும் 11- ஆம் தேதி முதல் நவம்பா் 10 -ஆம் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில் அந்த ரயில் தாம்பரம் வரையே இயக்கப்படும்.
சென்னை எழும்பூா் - மும்பை செல்லும் சிஎஸ்எம்டி விரைவு ரயில் வரும் 11 -ஆம் தேதி முதல் நவம்பா் 10 -ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும். மறுமாா்க்கத்தில் மும்பையிலிருந்து வரும் சிஎஸ்எம்டி விரைவு ரயில் எழும்பூா் வரை இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.