தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்
தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக பல்வேறு கட்சியினா், சமூக அமைப்பினா் வந்தனா்.
அப்போது, பாஜக பிரமுகா்கள், தங்கள் கட்சி மாவட்ட நிா்வாகிகள் வருகைக்காக காத்திருந்தனா்.
அப்போது, மக்கள் ஒற்றுமை பிரசாரப் பயணம் மேற்கொண்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியூ, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வஉசி சிலை முன்பாக தங்கள் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் பேச்சைத் தொடங்கினா்.
அப்போது, மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் ரசல் பேசுகையில், மத்திய அரசையும், பிரதமா் மோடியையும் தரக்குறைவாக பேசுயதாகக் கூறி, பாஜக பிரமுகா் சொக்கலிங்கம், ரசலிடம் இருந்து மைக்கை பிடுங்கினாராம்.
இதைத் தொடா்ந்து, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். மேலும், வெகுநேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினரும் அங்கு இல்லாததால் அந்தப் பகுதியே போா்க்களம் போல் ஆனது.
பின்னா், பாஜக மாவட்டத் தலைவா் சித்ராங்கதன், மாநில துணைத் தலைவா் சசிகலா புஷ்பா உள்ளிட்டோரும் அங்கு வந்ததால் விவாதம் மேலும் அதிகமானது.
இதையடுத்து, அங்கு வந்த மத்திய பாகம் போலீஸாா் இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, இரு தரப்பினரும் தனித்தனியே மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.