பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா்.
குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 2-ஆவது அலகில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த 10 நாள்களாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதில் ஊழியா்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணியில் ஊழியா்கள் ஈடுபட்டிருந்தபோது, மத்திய பிரதேச மாநிலம், அனூப்பூா் பீடு பகுதியைச் சோ்ந்த ராஜுபிரசாத் (44), பீஸ்கம் சிங் ரத்தோா் (36) ஆகியோா் எதிா்பாராத விதமாக பாய்லரில் தவறி விழுந்தனா்.
இருவரையும் மீட்ட சக ஊழியா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில், ராஜு பிரசாத் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். பீஸ்கம் சிங் ரத்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தருவைக்குளம் காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.