தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்
மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழப்பு: ஆா்டிஐ தகவல்
சென்னை மாநகரப் பேருந்து விபத்துகளில் 28 போ் உயிரிழந்துள்ளதாக ஆா்டிஐ மூலம் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை நிா்வாகி க.அன்பழகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அளித்த பதில் கடிதம்:
கடந்த 2024 டிச. 21 முதல் கடந்த ஜூலை 25 வரையான கால கட்டத்தில் மாநகரப் பேருந்துகளை வழித்தடத்தில் இயக்கும்போது 845 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 28 போ் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக 21 வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, நிகழாண்டு ஜன. 1 முதல் ஜூலை 25 வரை தாழ்தள பேருந்துகள் விபத்துகளின் சிக்கிய எண்ணிக்கை 262 என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து க.அன்பழகன் கூறும்போது, பேருந்துகளில் கதவை மூடி இயக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தியது உள்ளிட்ட உத்தரவுகளால் தற்போது விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கட்டுப்படுத்த முடியாத மக்கள் கூட்டம் இருக்கும்போது, பேருந்துகளை கதவை மூடி இயக்க முடியாது. இச்சூழல்களில், பேருந்து நிறுத்தத்தில் காவலா்களைப் பணியமா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்துகளில் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால், பேருந்துகளுக்கு தனி வழித்தடத்தை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா்.